×

வறண்ட நிலத்திலும் வாழை சாகுபடி

முக்கனிகளில் ஒன்றாக முக்கியத்துவம் பெற்றுள்ள வாழை சாகுபடியில் சாதனை படைத்து வருகின்றனர் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதி விவசாயிகள். உழவர்களின் ‘முப்பட்டை’ எனப்படும் நாட்டு வாழை சாகுபடியில் ‘சைலன்டாக’ சாதித்து வருகின்றனர் தென் மாவட்ட விவசாயிகள். உலகளவில் வாழை சாகுபடியில் ஆண்டிற்கு 1, 68, 13, 500 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ள இந்தியாவில் தமிழ்நாட்டில் அதிகமாக வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. வாழை மற்றும் அது சார்ந்த பொருட்கள் மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்பால் விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடிய முக்கிய வேளாண் பொருளாக இருப்பதால் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தண்ணீர் அதிகம் கிடைக்கக்கூடிய திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாகவும், தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், கரூர், கோயம்புத்தூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாகவும் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், வறண்ட பகுதியான ராமநாதபுரம், விருதுநகர் பகுதியில் வாழை சாகுபடியில் ஆண்டிற்கு விவசாயி ஒருவர் ரூ.2 லட்சம் முதல் லாபம் ஈட்டி வருகின்றார்.நெல் பிரதானமாகவும், மிளகாய், சிறுதானியங்கள் உள்ளிட்டவை அதிகமாகவும் பயிரிடப்படும் ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இரு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் இந்த வாழை சாகுபடி நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலராமநதி, கோரைப்பள்ளம், கிளாமரம், ராமசாமிப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் சுமார் 100 ஏக்கர், விருதுநகர் மாவட்டத்தில் ஆலடிப்பட்டி, கல்லுப்பட்டி, பரளச்சி, செட்டிக்குளம், மீனாட்சிபுரம் என 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் முப்பட்டை எனப்படும் இரண்டு வருட நாட்டு வாழை மட்டுமே வளர்க்கப்படுகிறது. விருதுநகர் பகுதியில் சில இடங்களில் மொந்தன், ரஸ்தாலி வளர்க்கப்படுகிறது. விவசாய சங்க பிரதிநிதியும், இயற்கை விவசாயியுமான கோரைப்பள்ளம் ராமரிடம் பேசினோம், ‘‘கோரைப்பள்ளத்தில் சாணம், ஆட்டுப் புழுக்கை உள்ளிட்ட இயற்கை உரங்கள், பஞ்சகாவியம் உள்ளிட்ட மருந்து தெளிப்பான்கள் பயன்படுத்தப்பட்டு சுமார் 10 ஏக்கரில் முப்பட்டை வாழை வளர்க்கப்படுகிறது. கன்றுகளுக்கு போர்வெல், கிணற்றுத் தண்ணீரை அரசு தரக்கூடிய சொட்டுநீர்ப் பாசனக் குழாய்களை பயன்படுத்தி தண்ணீர் விடப்படுகிறது. ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் செலவு ஆகிறது. ஆனால் 2 ஆண்டுகளில் ரூ.2.50 லட்சம் வரை லாபம் கிடைக்கும் தொழிலாக இருப்பதால், வாழை சாகுபடியில் ஆர்வம் உள்ளது. இலை, காய் சாகுபடிக்காக மட்டுமே வாழை விவசாயம் செய்கிறோம். விருதுநகர், மதுரை வியாபாரிகள் தோட்டத்திற்கே நேரடியாக வந்து இலை, பூ, காய் உள்ளிட்டவற்றை வாங்கிச்செல்கின்றனர். இதனால் சந்தைப் படுத்துதல் சுலபமாக முடிகிறது. வாழையுடன் ஊடுபயிராக நாட்டு மிளகாய் செடிகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது, வாழை, மிளகாய் மூலம் இரட்டிப்பு வருமானமாக ரூ.4 லட்சம் வரை கிடைக்கிறது. மிளகாய் வத்தலை அமெரிக்கா போன்ற வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது’’ என்றார். இயற்கை விவசாயி என்பதால் மற்ற விவசாயிகளுக்கும் ராமர் ஆலோசனைகள் வழங்கிவருகிறார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘வாழை சாகுபடி செய்ய முடிவு செய்து விட்டால் முதலில் நிலத்தை பக்குவப்படுத்த வேண்டும். வாழை நட்ட பிறகு கட்டாயமாக முறையாக பராமரிப்பு பணிகளை பின்பற்ற வேண்டும். நன்செய் நிலத்தில் வாழை சாகுபடி செய்யப்படுவதால் ஒவ்வொரு வரிசை விட்டுக் கால்வாய்கள் எடுக்க வேண்டும். ஐந்து வரிசைகளுக்கிடையில் குறுக்கு கால்வாய் எடுக்க வேண்டும். தண்ணீர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை விடலாம். நிலத்தில் கிடை ஆடு, மாடுகளை அடையப்போடலாம். பழைய இலைகள், தண்டுகளை இயற்கை உரமாக்கி இடலாம். சாணத்தைக் கொட்டி கிளறிவிட்டு நல்ல மக்கிய பிறகு நிலத்தை உழுது சீர்படுத்த வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மண்வெட்டியால் கொத்தி மண்ணை அணைக்க வேண்டும். பக்க கன்றுகள் மாதம், மாதம் நீக்க வேண்டும். இலைக்காக வேண்டி 3, 4 பக்க கன்றுகளை வளரவிடலாம், தேவையற்ற துளிர்களை தவிர்க்க கவனமாக மண்ணெண்ணெய் சொட்டுகளை விடலாம். பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்ற இயற்கை பஞ்ச காவியத்தை தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். வாழைக்காய் வெடிக்காமல் இருக்க இலை அல்லது சாக்கு கவரைக் கொண்டு மறைக்கலாம். நல்ல மகசூல் பெற மரத்தில் 10 முதல் 15 இலைகள் இருக்க வேண்டும். குலை தள்ளியதும் பட்டுப்போனால் பரவாயில்லை, அது வழக்கமானதுதான், அளவாக வெட்டியபிறகு பக்க கன்றுகளை வளர்க்க வேண்டும். கூடுதலாக இணை வருமானம் கிடைக்கவும், களைகளை கட்டுப் படுத்தவும் ஊடுபயிராக மிளகாய், தக்காளி, அகத்தி உள்ளிட்டவற்றை பயிரிடலாம்’’ என்றார். கிளாமரம் கிராம விவசாயிகள் அன்னக்கிளி, மலைச்சாமி கூறும்போது, ‘‘ஒரு ஏக்கரில் ஆயிரம் வாழைகள் நடப்பட்டுள்ளது. 2 வருடமாக நல்ல விளைச்சல் இருந்தாலும், கடந்த 2 ஆண்டுகளாக மழையால் பாதிக்கப்படுகிறது, காய் காய்த்த நிலையில் மரம் வேரோடு சாய்ந்து விடுகிறது. அவ்வப்போது குலநோய் உள்ளிட்ட பூச்சி தாக்குதல் ஏற்படுகிறது. இதனால் ஒரு ஊசி ரூ.60 விலைக்கு வாங்குவதால் 1000 மரத்திற்கு ரூ.60ஆயிரம் செலவு ஆகிறது. இதனை போன்று உரம், பராமரிப்பு செலவுகள் அதிகமாகிறது. தார் ஒன்று ரூ.200 முதல் ரூ.230 வரை விலைக்கு செல்கிறது. வாழை நோய், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போது லாபம் குறைந்து வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. சில நேரம் அதிக மகசூல் கிடைத்தால், விலையும் குறைந்துவிடுகிறது இது போக இலை, தண்டு, பூ  சில்லரை வியாபாரமாக நடக்கிறது. எனவே அரசு மானிய விலை உரங்கள் வழங்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் சில நேரங்களில் கைகொடுப்பதில்லை. எனவே மானியவிலை மோட்டார், குழாய்கள் வழங்க வேண்டும். உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் தெளிப்பான்கள் வழங்க வேண்டும். முக்கியமாக 6 மாதத்திற்கு ஒருமுறை தோட்டக்கலை அலுவலர்கள் நேரடியாக வந்து ஆய்வு செய்து நிறை, குறைகளை கேட்டறிய வேண்டும்’’ என்றனர். ராமநாதபுரம் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் நாகராஜன் கூறும்போது, ‘‘வாழை நடும்போது விதை நேர்த்தி செய்து, களிமண் கலவையை பூசி, 1.8 மீட்டர் இடைவெளியில் ஒன்றரை மீட்டர் நீளம், அகலக் குழியில் நட்டு மண் அணைக்க வேண்டும். ஏக்கருக்கு சாம்பல்சத்து 330 கிலோ, மணிச்சத்து 35 கிலோ, தாழைச்சத்து 110 கிலோ என 3, 5, 8 என்ற மாதங்களில் உரம் இட வேண்டும். இவ்வாறு செய்தால் 8 மாதத்தில் காய் வந்துவிடும், 12, 13 மாதங்களில் அறுவடை செய்துவிடலாம். காய் குலை தள்ளியவுடன் தாய் செடியின் தலைப்பகுதியை 60 செ.மீ விட்டு வெட்டி விட வேண்டும், 1 முதல் 3 பக்க கன்றுகளை வளரவிட்டால் போதும். இலைப் புள்ளி நோய், இலைக் கருகல் நோய் சில நேரங்களில் குலைநோய் தாக்குதல் இருந்தால் தோட்டக்கலைத்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆய்வு செய்த பிறகு பூஞ்சாண மருந்துகளை தெளிக்க வேண்டும், அல்லது இயற்கை மருந்தான பஞ்சகாவியத்தை முறையாக தெளிக்கலாம். நெல், மிளகாய் போன்று வாழைக்கும் அவசியம் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும். 30 சதவீதம் பாதிக்கப்படும்போது உரிய இழப்பீடு பெறலாம்’’ என்றார்.

தொடர்பிற்கு
* விவசாயி சங்க பிரதிநிதி இயற்கை விவசாய ஆலோசகர் ராமர் : 91594 05051

* தோட்டக்கலை துணை இயக்குனர் நாகராஜன் : 94436 08932* விவசாயி மலைச்சாமி, அன்னக்கிளி : 89406 03844தொகுப்பு: படங்கள்: எம். சுப்ரமணிய சிதம்பரம்

The post வறண்ட நிலத்திலும் வாழை சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Kadakodi ,Ramanathapuram ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில்...